அம்பத்தூர்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
குறிப்பாக தக்காளி ரூ.150-க்கும், பீன்ஸ் ரூ.250-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று காலை, 700 வாகனங்களில் இருந்து, 7,000 டன் காய்கறிகள், கோயம்பேடு சந்தைக்கு வந்தன. வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி கிலோ ரூ.50-க்கும், பீன்ஸ் ரூ.150-க்கும், அவரைக்காய் ரூ.20-க்கும் விற்பனையானது.
இதேபோல், ஒரு கிலோ வெங்காயம், காராமணி, சேம கிழங்கு ரூ.50, வெங்காயம், முருங்கைக்காய் ரூ.60, உருளைக்கிழங்கு ரூ.43, கேரட் ரூ.40, பீட்ரூட், புடலங்காய், சுரைக்காய் ரூ.25, சவுசவ், முள்ளங்கி, கத்தரிக்காய் மற்றும் பாகற்காய், கொத்தமல்லி ரூ.30, காலிபிளவர், பீர்க்கங்காய், முட்டைகோஸ் ரூ.35, சேனைக்கிழங்கு ரூ.66, பச்சை மிளகாய் ரூ.80, இஞ்சி ரூ.180, பூண்டு ரூ.350, பட்டாணி ரூ. .230-க்கு விற்பனை செய்யப்பட்டது.