கோவை சாய்பாபா காலனி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மழைநீரில் சிக்கியது. கோவையில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாய்பாபா காலனி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மழைநீரில் மூழ்கியது.
இந்நிலையில், சிவானந்தகாலனியில் இருந்து சாய்பாபாகாலனி செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மீட்புப் பிரிவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கோவையிலும் பெய்த கனமழையால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சிங்காநல்லூர், ராமநாதபுரம், சரவணம்பட்டி, கணபதி, காந்திபுரம், விமான நிலையம், விளாங்குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கனமழை காரணமாக நகரின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோவை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. இன்று மாலை கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்தது. இதனால் சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, தேனி, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, திருச்சி, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.