நாகர்கோவில்: திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவரும் நிலையில் குளிப்பதற்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தில் நேற்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலையில் மழை வெளுத்து வாங்கியது.
நாகர்கோவிலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இன்றும் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதிகாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, குலசேகரம், பூதப்பாண்டி, தடிக்காரங்கோணம், இரணியல், குருந்தன்கோடு, களியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை நீடித்தது. பூதப்பாண்டியில் அதிகபட்சமாக 25.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை நீடித்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவரும் நிலையில் குளிப்பதற்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சிற்றாறு-1 அணையில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்தும் 811 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.69 அடியாக இருந்தது. அணைக்கு 408 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 512 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.82 அடியாக உள்ளது. அணைக்கு 250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.