தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு சார்பில், ‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
அரசுக் கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மடிக்கணினி, தற்போது தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதனொரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 7 தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தஞ்சாவூர் மண்டலம், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் ஏ.குணசேகரன் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்திப் பேசினர்.
திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.பழனிவேல், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், செ.ஞானப்பிரகாசம், ஆர்.பன்னீர் செல்வம், குழ.செ.அருள்நம்பி, நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ப.குமார், தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள், இரா.அருண்மொழி, பி.ஜெயக்குமார் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், ஆவணம் டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி, பட்டுக்கோட்டை மீனாட்சி சந்திரசேகரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆவணம் டாக்டர் கலாம் பார்மஸி கல்லூரி, ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரி, பேராவூரணி வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பட்டுக்கோட்டை கோ-ஆப் ஐடிஐ உள்ளிட்ட 7 கல்லூரிகளைச் சேர்ந்த, 614 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
முன்னதாக கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் சி.ராணி வரவேற்றார். நிறைவாக பேராசியர் நா.பழனிவேலு நன்றி கூறினார்.