சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் டிபிஐ வளாகம் உள்ளது. தற்போது அதன் பெயர் பேராசிரியர் அன்பழகன் வளாகம் என மாற்றப்பட்டுள்ளது. இங்கு பல அரசு துறை தலைமையகங்கள் இயங்கி வருகின்றன. பள்ளிக் கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைத்து தலைமை அலுவலகங்களும், பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம், தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம், தனியார் பள்ளிகள் இயக்குனர் அலுவலகம், அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகம், முறைசாரா கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் (SSA) மாநிலத் திட்டம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவை இந்த வளாகத்தில் அமைந்துள்ளன.
மேலும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), சிபிஐ தெற்கு மண்டல அலுவலகம், மத்திய வெளியுறவு அமைச்சக கிளை செயலகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்ற பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களும் இங்கு அமைந்துள்ளன. இந்த அரசு அலுவலகங்களில் 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வளாகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
வேலை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் டிபிஐ வளாகத்தில் பொது கழிப்பறை வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. ஈவிகே சம்பத் கட்டிடம், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடம், எஸ்எஸ்இ கட்டிடம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கட்டிடம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அந்தந்த அரசு அலுவலகங்களுக்கு தனி கழிப்பறை வசதி உள்ளது. ஆனால், டிபிஐ வளாகத்திற்கு வரும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு பொது கழிப்பறை வசதி இல்லை.
ஒரு சில அரசு அலுவலகங்களில் உள்ள தனிநபர் கழிப்பறைகள் மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வசதியாக உள்ளது. ஒரு சில அலுவலகங்களில் உள்ள கழிவறைகளை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அவற்றை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. வெளியூர்களில் இருந்து பணிக்கு வரும் ஆசிரியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் காலையில் வந்தால், பணியை முடித்து விட்டு செல்ல அரை நாள் ஆகிறது. இதனால், பொதுக்கழிப்பிட வசதியில்லாததால், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
டிபிஐ வளாகத்திற்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ”இங்கு பொது கழிப்பறை வசதி இல்லாதது பெரும் பிரச்னையாக உள்ளது. தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் வளாகத்தில் பொது கழிப்பறை வசதி இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. ஆண்கள் எப்படியாவது ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுநீர் கழிக்க முடிகிறது. ஆனால் பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. DPI வளாகத்தில் பல காலி இடங்கள் உள்ளன.
எனவே, பொதுக் கழிப்பறைகள் கட்டுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, டிபிஐ வளாகத்தில் பொதுக்கழிப்பிட வசதி செய்து தர, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், பராமரிப்பு பணிக்கு குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கலாம்,” என்றனர்.