தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. இது ஆசியாவின் 2-வது பெரிய முதலைப் பண்ணையாகும். இந்த அணையை காண வரும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் முதலை பண்ணையை பார்வையிடுகின்றனர். இது தவிர சாத்தனூர் அணையில் ஏராளமான முதலைகளும் வாழ்கின்றன. எனவே, அணையில் மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பர்.
இந்நிலையில், 119 அடி உயரமுள்ள சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணையை பாதுகாக்க நேற்று தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையில் இருந்து தப்பிய ராட்சத முதலை ஒன்று 11 கண்மாய் மதகு பகுதியில் படுத்திருந்தது. இதைப் பார்த்த தொழிலாளர்கள் முதலையை மீண்டும் அணைக்குள் விரட்டினர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் ராட்சத முதலை ஒன்று அணையில் இருந்து தப்பி 11 கண்மாய் மதகு பகுதியில் படுத்திருந்தது.
அப்போது வேப்பூர்செக்கடி கிராமத்தில் இருந்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும், வனத்துறையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து முதலையை அணைக்கு விரட்டினர்.
தற்போது அணை முழுமையாக நிரம்பி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் முதலைகள் மீண்டும் மீண்டும் வெளியேறி மக்கள் நடமாடும் பகுதிக்கு வருவது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.