சென்னை: கோடை காலத்தில் தமிழகத்தின் மின் தேவை எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இந்த ஆண்டு தமிழகத்தின் மின் தேவை சுமார் 22 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய மின் தேவையை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின் பகிர்மான தளத்திற்கு குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வெளி மார்க்கெட்டில் இருந்து மின்சாரம் வாங்க அனுமதித்துள்ளது.
அதன்படி, பிப்ரவரியில் 200 மெகாவாட், மார்ச்சில் 250 மெகாவாட், ஏப்ரலில் 1,200 மெகாவாட், மே மாதத்தில் நள்ளிரவு 12 மணி முதல் மாலை 6 மணி வரை 600 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரியில் 540 மெகாவாட், மார்ச்சில் 1575 மெகாவாட், ஏப்ரலில் 2340 மெகாவாட், மே மாதத்தில் 1320 மெகாவாட் என மொத்தம் 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் இருந்து பீக் ஹவர்ஸில் (மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை) வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, சந்தையில் உடனடியாக டெண்டர் விடப்பட்டு மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.