சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவை கவுரவிக்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீவைகுண்டத்தில் கட்டப்படும் புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு “தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா கட்டிடம்” என்று பெயர் சூட்ட உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தின் தலைசிறந்த கம்யூனிஸ்ட் சிந்தனையாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான ஆர்.நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் போற்றும் வகையில், தமிழக அரசு 2022-ம் ஆண்டு அவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிக் கௌரவித்தது. இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது 100-வது பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று வாழ்த்திய அவரது கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த ஸ்ரீ வைகுண்டம் அரசு மருத்துவமனையை சிடி ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தவும், கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டடம் அமைக்கவும் உத்தரவிட்டார்.
85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையையே முதன்மைக் கடமையாகக் கொண்டு எப்போதும் பாடுபட்ட தன்னலமற்ற, அர்ப்பணிப்புள்ள தமிழன் ஆர்.நல்லகண்ணுவின் பெருமையைப் போற்றும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மேலும் ஸ்ரீ வைகுண்டத்தில் கட்டப்படும் புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா கட்டிடம் என பெயர் சூட்ட உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.