கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில் ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐய்யஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் ஊரப்பாக்கம் ஊராட்சியில் ரோடு, கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால், கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த ஊராட்சிக்கு உள்பட்ட 13-வது வார்டுக்கு உள்பட்ட யமுனா நகர், கோதாவரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பிரதான சாலை மற்றும் தெருக்கள் கடந்த 6 மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. இப்பகுதியில், ரோடு, கால்வாய் வசதி இல்லாததால், மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும், சாலையோரம் எங்கு பார்த்தாலும் குப்பை காடாக காட்சியளிக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி மக்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கனமழை பெய்யும் போது குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கும் அவல நிலை உள்ளது. எனவே கலெக்டர் இதில் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் சாலை, கால்வாய், தெருவிளக்கு, குடிநீர், குப்பை அள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஊராட்சி செயலர் பாளையம் கருணாகரனிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அவரை இடமாற்றம் செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.