வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் கனமழை பெய்யும் நாட்கள் குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய உள்ளது. வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அடுத்த சுற்று மழை எங்கு எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், டிசம்பர் 10 முதல் 25ம் தேதி வரையிலான இரு வாரங்களில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து தமிழகத்தில் அடுத்தடுத்த சுற்றுகளில் மழையை கொடுக்கும். குறிப்பாக, வடகிழக்கு பருவமழையின் நான்காவது சுற்று டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 15-ம் தேதி காலை வரை நான்கு நாட்கள் நீடிக்கும்.
இதனால் தமிழகத்தில் மழை பெய்யும். இந்த சுற்றுகளில் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கணிசமான அளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தென் மத்திய வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை நிலவரப்படி தென் மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. \
இது இன்று நன்கு நிலைபெற்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவை டிசம்பர் 11-ம் தேதி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்காளத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இது மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வட தமிழகம் மற்றும் டெல்டா கடற்கரையை நோக்கி நகரும். டிசம்பர் 11ஆம் தேதி மிக மெதுவாக நகரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை.
அதேநேரம், டிசம்பர் 10-ம் தேதி இரவு முதல் மழை பெய்யத் தொடங்கி, 11-ம் தேதி கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். டிசம்பர் 11ஆம் தேதி உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வலுப்பெறும் என்றும், வடகிழக்கு பருவமழை தமிழக கடற்கரையை நெருங்கும் போது இந்த இரண்டு நாட்களில் நான்காவது சுற்று தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதை ஒட்டிய உள்மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் டெல்டா மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.வட கடலோர மாவட்ட மக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் குறிப்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.