ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஆண்டாள் கோயில் பெரிய பெருமாள் சன்னதி கல் மண்டபத்தில் தேங்கிய மழைநீர் காலை வரை வடியாததால் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகினர். கழிவுநீர் கால்வாயை தூர்வார பலமுறை புகார் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாதது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் ரெங்கமன்னார் கோயில், வடபத்ரசாயி கோயில் என இரண்டு வளாகங்கள் உள்ளன. முதன்மையான வடபத்ரசாயி கோவிலின் கீழ் தளத்தில் நரசிம்மர் சன்னதியும், மேல் தளத்தில் வடபத்ரசாயனர் (பெரிய பெருமாள்) தல விருட்சமும் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் உள்ள பெரிய கோபுரத்தின் அருகே பெரியாழ்வார் சன்னதி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மிதமான மழையின்போது, கோயில் வெளிப் பிராகாரம் மற்றும் பெரியாழ்வார் சன்னதி முன்புறம் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. அப்போது, பெரிய கோபுரம் எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கோவிலுக்குள் மழைநீர் தேங்குவதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் கழிவுநீர் கால்வாயை தூர்வார நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையில் வடபத்ரசாயி கோயில் வெளிப் பிராகாரம் மட்டுமின்றி உள்பிரகாரத்திலும் குளம் போல் மழைநீர் தேங்கியது.
திங்கள்கிழமை மார்கழி மாதம் துவங்கியதை அடுத்து, தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை ஆண்டாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோயில் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதால் சிரமப்பட்டனர்.
மிதமான மழையால் கோயில் வெளிப் பிராகாரத்தில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், சாக்கடை கால்வாய்களை தூர்வாரியிருந்தால் கோயிலுக்குள் மழைநீர் தேங்கியிருக்காது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஆண்டாள் கோவில் கல் மண்டபத்தில் மழைநீர் தேங்குவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.