திண்டிவனம்: திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள வீட்டில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். சட்டப் பேரவை கூட்டத்தொடரை 100 நாட்கள் நடத்த வேண்டும். தமிழகத்தில் நடக்கும் கொடூர கொலைகளை தடுக்க சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்.

கடை பெயர் பலகைகளை தமிழில் வைப்பது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் வெளியுறவு அமைச்சகம் தூங்குகிறது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாடுகளிலும், பல்வேறு மாநிலங்களிலும் சாலைகள், பாலங்களின் ஓரங்களில் கட்சி விளம்பரங்கள் இல்லை. எனவே தமிழகத்திலும் இது தேவையில்லை. சாலைகள் மற்றும் பாலங்கள் பளபளப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.