சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 25 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் (27) ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ராமதாஸ், கனகராஜ் மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என்றும், 9 மாதங்களுக்கு முன்பே திருமணமானவர் என்றும் குறிப்பிட்டார். மகிழ்ச்சியுடன் வாழ வேண்டிய இளைஞரை ஆன்லைன் சூதாட்டம் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டது என்பது எவ்வளவு மோசமானது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
2023ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று தீர்ப்பளித்ததன் பிறகு, கனகராஜ் 25வது தற்கொலை செய்தவர் ஆவார். 2025ம் ஆண்டு பிறந்து 3 மாதங்களாகியும் இதுவரை 8 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களால் ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனால், அந்த தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறியதால், சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்பு தொடரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதே ஒரே வழி. ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் வீதிக்கு வரும் நிலையில், தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது அரசின் அலட்சியம் என ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். ஊழல் வழக்குகளை விரைவுபடுத்தும் தி.மு.க., அரசு, ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதை வைத்து பார்க்கும் போது, மக்கள் நலத்தை விட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலனையே முன்னிலைப்படுத்துகிறதோ? என்ற ஐயம் எழுகிறது என்றும் அவர் கூறினார்.
இந்த ஐயத்தைப் போக்க, உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து, தடை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.