சென்னை: தமிழை வளர்க்க, பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை பயிற்றுவிக்க சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழை வளர்க்கவோ, மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்டவோ ‘ரூ.’ போட தேவையில்லை. மாறாக தாய்த் தமிழை வளர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
1999-ம் ஆண்டு சென்னையில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, எட்டாம் வகுப்பு வரையாவது தமிழை பயிற்றுவிப்பதற்கான சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி, சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். தங்களுக்கு உறுதியளித்தபடி தமிழை பயிற்று மொழியாக்க சட்டம் இயற்றத் தவறிய அப்போதைய திமுக அரசு, அதற்குப் பதிலாக ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தமிழை பயிற்றுவிப்பதற்கான அரசாணையை வெளியிட்டது.

ஆனால், அடுத்த 5 மாதங்களில் அந்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. தமிழை பயிற்றுமொழியாக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டிய திமுக அரசு, 2006-ல் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் முதன்முறையாக ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி தமிழுக்கு துரோகம் செய்தது இன்று வரை தொடர்கிறது.
மொழி விவகாரத்தில் உணர்ச்சிகளைத் தூண்டுவது அரசியல் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்; ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே தீர்வு. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைத்து தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும். நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை பயிற்றுவிப்பதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.