மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் பாமக வன்னியர் சங்கம் சார்பில் இளைஞர் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு வடதமிழகம் முழுவதும் பாமகவினர் பெருமளவில் வந்துள்ளனர். பத்து வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த விழாவுக்கு அரசியல் முக்கியத்துவம் அதிகம்.மாநாட்டில் உரையாற்றிய பாமக செய்தித் தொடர்பாளர் பாலு, வன்னியர் சமூக இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசு அமைதியாக இருப்பதை கடுமையாக விமர்சித்தார்.

தமிழகத்தில் 398 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ள நிலையில், வன்னியர்கள் வெறும் 18 பேர் தான் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது என்று அவர் கூறினார்.இதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும், இதன்மூலம் ஒவ்வொரு சமூகத்துக்கும் விகிதாசார பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகளின் சமூக பின்னணி தெரிய சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் என அவர் தெரிவித்தார்.
பாலு மேலும் கூறியதாவது, கலைஞர் தன்னை அண்ணாவின் அருகே மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார். இதற்கு இடம் கிடைக்க பாமக தலைவர் ராமதாஸ் தான் நடவடிக்கை எடுத்தார். ஆனால், தற்போது அந்தக் கட்சி வன்னியர் இடஒதுக்கீடு கேட்கும் போது, ஸ்டாலின் கவனிக்க கூட தயாராக இல்லை என்றார்.ராமதாஸ் போர்த்திய மஞ்சள் துண்டோடு கலைஞர் அரசியலில் நடந்ததாகவும், பாமக விடுக்கும் கோரிக்கைகளை ஸ்டாலின் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுப்பதாகவும் பாலு குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை செய்ய வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் எடுத்துள்ளதாகவும், மாநில அரசுக்கும் இதனை செய்ய முடியாது என்று கூறுவது தவறு என்றும் அவர் விமர்சித்தார்.திமுக தான் சமூகநீதி சார்ந்த கட்சி என்று சொல்லிக்கொள்கிற போது, வன்னியர்களுக்கு உரிய உரிமையை வழங்க மறுப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பினார்.இடஒதுக்கீடு, சமுதாய நியாயம் ஆகியவை பாமக போராட்டத்தின் மையம் என்றும், அதற்காகவே இந்த மாநாடு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மாநில அரசை சாடிய பாமக பாலுவின் பேச்சு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கணக்கீடுகளுடன் பார்க்கப்படுகிறது.அதிகபட்ச சமூகத்துக்கே குறைந்த அளவில் இடம் கிடைக்கும் நிலை தொடர முடியாது என்றும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த மாநாடு பாமக வன்னியர் பிரிவினருக்குள் ஒற்றுமையை உருவாக்கவும், அரசு மீது அழுத்தம் கொடுக்கவும் ஒரு ப்ளாட்ஃபாரம் என்றார்.
இந்தக் கூட்டம் அரசியல் பரிமாணங்களையும் கொண்டது என்பது நிச்சயம்.வன்னியர் சமுதாயம் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பாமக நோக்கம் என்றும் பாலு தெரிவித்தார்.இது பாமக சார்பில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான உறுதியான குரல் என்றும், இடஒதுக்கீட்டு போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.மேலும், மாநில அரசு இதைப் பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் நிச்சயம் தங்கள் முடிவை தெரிவிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.