சென்னை: வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் பழுதடைந்த விசைப்படகில் இருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்களது மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது கண்டிக்கத்தக்கது. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் படகில் ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆந்திர மீனவர்கள் என்றும் கூறப்படுகிறது. வழியில் நெடுந்தீவு அருகே அவர்களது படகு பழுதடைந்தது.
பழுதடைந்த படகை சீர்செய்ய முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்டு உதவுவது கடற்படையினரின் வழக்கம். ஆனால், தமிழர்களை வெறுக்கும் இலங்கை ராணுவம் அவர்களை கைது செய்துள்ளது.
மீனவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், கைது செய்தது தவறு. இந்திய-இலங்கை எல்லையில் மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்ததை இந்திய இறையாண்மைக்கு எதிரான போராக கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதும் மத்திய அரசு கண்காணித்து வந்ததுதான் நிலைமை மோசமாகியதற்குக் காரணம். மீனவர்கள் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.
இப்பிரச்னையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் அழைத்து மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.