கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நிலைத்துள்ளது. அதை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்துள்ளது.
கள்ள சாராய வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வரும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராய விற்பனைக்கு ஆளும் திமுக நிர்வாகிகளும், அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களும் முழு உறுதுணையாக உள்ளனர் என்பது பாமகவின் குற்றச்சாட்டு. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றினால் அனைத்து உண்மைகளும் வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தில் திமுக அரசு உள்ளது.
அதனால்தான் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த தமிழக அரசு, இது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் திமுகவினரின் தொடர்பையும், திடுக்கிடும் உண்மைகளையும் மூடிமறைக்கும் திமுக அரசின் முயற்சிக்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அடி.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, விரைவில் தொடங்கும் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எல்லா வகையிலும் ஒத்துழைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் ஒரு துளி கூட கள்ள சாராயம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.