இடஒதுக்கீடு விவகாரத்தில் வன்னியர்களுக்கு தமிழக அரசு பெரும் அநீதி இழைத்து வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாண்டுகளில் மின்கட்டண உயர்வால் கிடைத்த வருவாய் குறித்து தமிழக அரசுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நீதிமன்ற உத்தரவுப்படி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக கூறிய தமிழக அரசு, தற்போது முடியாது என மறுத்து வருவதாகவும், இதன் மூலம் வன்னியர்களுக்கு தமிழக அரசு பெரும் அநீதி இழைத்துள்ளதாகவும் ராமதாஸ் கூறினார்.
மேலும் பேசிய அவர், திருவண்ணாமலை ரயில்வே திட்டத்தை உரிய நிலம் கையகப்படுத்தி உரிய நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் முடிக்க வேண்டும் என்றார்.
காவிரி நீரை நம்பி ஒன்றரை லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளதால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை திறந்துவிட தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதிக வரி செலுத்தும் தமிழகத்திற்கு மத்திய அரசு குறைந்த நிதியே ஒதுக்கியுள்ளது என்றும், குறைந்த வரி செலுத்தும் சில மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி தமிழக அரசுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டினார். இதனை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.