ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசி மகா சிவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. காலை 10 மணிக்கு ராமநாத சுவாமி, பிரியாவிடை, பர்வதவர்த்தினி அம்பாள் ஆகியோர் முழு அலங்காரத்தில் நந்திகேஸ்வரர் மண்டபத்தை வலம் வந்தனர்.
அங்குள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா சிவராத்திரி விழா தொடங்கியது. இதில், கோவில் உதவி ஆணையர் ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள், திரளான பக்தர்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு கோயில் நாயக்கர் வாசலில் தீப ஊர்வலம் முடிந்து சுவாமி, நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
முன்னதாக, மாலை 6 மணிக்கு திருகல்யாண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கலந்துரையாடல் நடந்தது. 20ம் தேதி சுவாமி, அம்பாள் கெந்தமாதன் பர்வதத்தில் எழுந்தருளுவதையொட்டி, ராமநாத சுவாமி கோவில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்யவோ, புனித நீராடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழாவும், 27-ம் தேதி அக்னி தீர்த்த கடற்கரையில் அமாவாசை தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது. மேலும், திருகல்யாண மண்டபத்தில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.