தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. 1964-ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி கடுமையாக சேதமடைந்ததை அடுத்து, கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1965-ல் ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
இலங்கையில் உள்நாட்டுப் பிரச்னை போராக மாறியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக 1981 முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியா-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக இருநாட்டு வெளியுறவுத்துறை மற்றும் கப்பல் துறை இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், 14-ம் தேதி, நாகை துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகத்துக்கு, காணொலி காட்சி மூலம், பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
அப்போது, ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ராமேஸ்வரம்-தலைமன்னார், ராமேஸ்வரம்-காங்கேசன் துறைமுகம் ஆகிய இரு வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஆலோசனை நடத்தி வந்தது. இதையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, வில்லூண்டி தீர்த்தம் கடற்கரை பகுதிகளில் ஜூன், ஜூலை மாதங்களில் கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்நிலையில், தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மை செயல் அலுவலர் வள்ளலார் தலைமையிலான அதிகாரிகள் ராமேஸ்வரம், வில்லூண்டி தீர்த்தம், முள்ளிவாசல் தீவு, பாம்பன் குந்துக்கால், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளுக்கு கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மை செயல் அலுவலர் வள்ளலார் கூறியதாவது:- முதற்கட்டமாக ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க ராமேஸ்வரத்தில் 4 இடங்களில் ஆய்வு செய்துள்ளோம். மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கிடைத்ததும், ஓரிடத்தில் பயணிகள் இறங்கும் தளம் அமைக்கப்படும். மேலும், தோனி படகு கப்பல்கள் மூலம் இலங்கை மற்றும் இந்திய துறைமுகங்களுக்கு இடையே சரக்குகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம், முள்ளிவாசல் தீவு, பாம்பன், தனுஷ்கோடி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வசதியாக உள்ளூர் சுற்றுலா படகு சேவை தொடங்குவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் ராமேஸ்வரத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.