சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக வலுப்பெற்று ஒடிசா – மேற்கு வங்கக் கடற்கரையை 24-ம் தேதி நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக வலுப்பெறும்.
அதன்பின், வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா – மேற்கு வங்கக் கடற்கரையை 24-ம் தேதி நெருங்கும். தமிழகத்தின் சில பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 24 முதல் 27-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை தஞ்சாவூர், புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மத்திய கிழக்கு வங்கக் கடலில் அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. சூறாவளி காற்றும் அதிக வேகத்தில் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.