ஸ்ரீவில்லிபுத்தூர் : வன விலங்குகளால் பயிர் சேதத்தை தடுக்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் முன் தென்னை விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.
இதற்கு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்தையா தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களான சிங்கம்மாள்புரம், மம்சாபுரம், வாழைக்குளம், திருவண்ணா மலை வெங்கடேசபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வன விலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் மலையடிவாரத்தில் உள்ள வாய்க்காலை வெட்டிப் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பின், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இணைந்து, புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜன், டி.எஸ்.பி. ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மலையடிவாரத்தில் கூடுதல் களப்பணியாளர்களை நியமித்து கண்காணிக்கவும், யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அகழிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மலையடிவாரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள விவசாய நிலங்களில் சூரிய அதிர்வு மின் வேலி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என துணை இயக்குனர் உறுதி அளித்தார். இதை ஏற்று விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.