மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 7,084 கன அடியாகவும், நேற்று 9,154 கன அடியாகவும் அதிகரித்தது.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், டெல்டா பாசனத்திற்கான நீர் இருப்பும் குறைந்துள்ளது. அதன்படி, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் நேற்று வினாடிக்கு 5,000 கன அடியில் இருந்து 2,000 கன அடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 106.19 அடியில் இருந்து 106.51 அடியாகவும், நீர் இருப்பு 73.09 டிஎம்சியில் இருந்து 73.53 டிஎம்சியாகவும் உயர்ந்தது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவேரியில் நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை அளவீட்டின் போது நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.