மேட்டூர்: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை முதல் அணையின் நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கனஅடி வீதம், 16 மதகுகள் மூலம் 4,500 கனஅடி வீதம் மொத்தம் 26,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 16,500 கன அடியாக குறைந்தது. இதையடுத்து 16 கண்மாய்கள் வழியாக உபரி நீர் வெளியேற்றுவது காலை 7.30 மணியளவில் நிறுத்தப்பட்டது. நீர்மின் நிலையங்கள் மூலம் டெல்டா பாசனத்துக்கு 16,000 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், நேற்று மாலை காவிரி ஆற்றில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 17,000 கனஅடியாக குறைந்தது.