தஞ்சாவூர்: தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் இன்று மண்டல அளவிலான இயற்கை வேளாண்மை கருத்தரங்கு நடந்தது.
இயற்கை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெங்களூரில் அமைந்துள்ள மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மையம், தமிழ்நாடு அரசு விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை, தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தால் மண்டல அளவிலான இயற்கை வேளாண்மை கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கில் தஞ்சாவூர் விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மிக குறைந்த பரப்பாக இருந்தாலும் அதிக விவசாயிகள் இயற்கை வேளாண்மை இடு பொருட்கள் பயன்படுத்தி இயற்கை வேளாண்மை சாகுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அரசின் இயற்கை வேளாண்மை திட்டமான தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில் பயன்பெற்ற அங்கக விவசாயிகளுக்கு அரசின் ஊக்க தொகையை கலெக்டர் வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக பெங்களூர் மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மைய இயக்குனர் முனைவர் வர்மா கலந்து கொண்டார். தொடர்ந்து ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் முனைவர் சுப்ரமணியம், ஈச்சங்கோட்டை
டாக்டர் எம் எஸ் சாமிநாதன் வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் ஜெகன்மோகன், சென்னை விதை சான்றளிப்பு இணை இயக்குனர் தபேந்திரன், தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் வித்யா, சென்னை உயிர்மச்சான்றளிப்பு துணை இயக்குனர் ஜோதிலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இயற்கை வேளாண்மையில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்து சென்னை தலைமைச் செயலக சிறப்பு திட்ட செயலாக்கு துறை செயற்பொறியாளர் பிரிட்டோராஜ் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து உயிர்மச்சான்று பெற்ற பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்த தலைப்பில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலைய தலைமை நிர்வாக அதிகாரியும், உணவு இடைவேளைக்கு பிறகு தஞ்சாவூர் நிப்டம் நிறுவனத்தின் இணை பேராசிரியர் முனைவர் வின்சென்ட் ஹேமா காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து கருத்தரங்கில் தொழில்நுட்ப உரையாற்றினர்.
தொடர்ந்து நிப்டமில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழில் காப்பு நிலையத்தினை கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயிகள் பார்வையிட்டனர்.
இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கண்காட்சி அரங்கில் பாரம்பரிய நெல் ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்களை குறிப்பிட்ட பதாகைகள், இயற்கை சாகுபடி செய்ய தேவையான இடுபொருள்கள் மற்றும் அறிவிக்க செய்யப்பட்ட உயர் விளைச்சல் தரக்கூடிய சன்னரக நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விவசாயிகளின் சந்தேகங்கள் குறித்து விதை சான்று மற்றும் விதை சான்றளிப்பு துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். தஞ்சாவூர் விதைச்சான்று அலுவலர் சங்கவி நன்றி கூறினார்.