மேட்டூர்: மேட்டூர் திப்பம்பட்டி நீர்நிலையத்தில் இருந்து காவிரி உபரி நீரை கொண்டு 56 ஏரிகளை நிரப்பும் வகையில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி இன்று மின்மோட்டார் மூலம் துவக்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் சரபங்கா நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து உபரி காவிரி நீரை வழங்கும் திட்டம் ரூ.673.88 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து, காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேற்று மாலை 6 மணியளவில் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் 16 கண்மாய்கள், நீர்மின் நிலையம் மற்றும் கால்வாய் மூலம் வினாடிக்கு 1,25,500 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, மேட்டூர் உபரி நீர் திட்டப்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மேட்டூர் அடுத்த திப்பம்பட்டி நீர்நிலையத்தில் இருந்து ஏரி, குளங்களை நிரப்பும் பணியை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.
பின்னர் எம்.காளிப்பட்டி ஏரிக்கு வரும் நீரை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், சதாசிவம், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டு, ஏரிக்கு வரும் தண்ணீரின் மீது மலர் தூவி வரவேற்றனர். காவிரி உபரி நீர் திட்டம் மூலம் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள 56 ஏரிகளை திப்பம்பட்டி நீர்த்தேக்கம், வெள்ளாளபுரம், கன்னந்தேரி துணை நீர்த்தேக்கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திப்பம்பட்டி நீர்நிலையத்தில் இருந்து வினாடிக்கு 214 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இங்கிருந்து எம்.காளிப்பட்டி ஏரி, ராயப்பன் ஏரி, சின்னேரி, மணத்தல் ஏரி, டி, மாரமங்கலம் ஏரி முதலில் நிரம்பும். பின்னர் நங்கவள்ளி குட்டை, வனவாசி ஏரி, கன்கான் ஏரி உள்ளிட்ட 56 ஏரிகள் தண்ணீர் நிரப்பப்படும். 4,016.16 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். இந்த 56 ஏரிகளில் நீர் நிரம்புவதை கண்காணிக்க 6 உதவி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை திருச்சி மண்டல பொறியாளர் தயாளகுமார், காவிரி நீர்ப்பிடிப்பு மேல்நிலை கண்காணிப்பு பொறியாளர் ராமலிங்கம், சரபங்கா காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்ட செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் பிரபு, வேதநாராயணன், உதவி பொறியாளர்கள் சேதுராஜன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.