ஜெயலலிதா இருந்திருந்தால் காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைத்திருக்கும் என்றும், அதேபோல் நீட் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு கிடைத்திருக்கும் என்றும், நீட் தேர்வில் திமுக தலையிடுவது பகல் கனவு என்றும் சசிகலா கூறினார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இன்று தொண்டர்களை சந்தித்தார் சசிகலா. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் கூறினார்.
திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளுக்கு போதிய பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும், கடந்த 2 மாதங்களாக ரேஷன் விநியோகம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் சசிகலா குற்றம் சாட்டினார். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் நல்ல முடிவைத் தர வேண்டும் என்றும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையிலும், இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த பதிலிலும் நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார். .
காவிரி பிரச்சனைக்கு எப்படி நிரந்தர தீர்வு கொடுத்தாரோ அதே போல நீட் தேர்வு பிரச்சனைக்கும் ஜெயலலிதா இருந்திருந்தால் நிரந்தர தீர்வு கிடைத்திருக்கும் என சசிகலா தெரிவித்துள்ளார். நீட் விவகாரத்தை திமுக மறைமுகமாக பயன்படுத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா, மக்களையும் வாக்காளர்களையும் பிச்சைக்காரர்களாகவே திமுக கருதுகிறது என்றார்.