சென்னை: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேக்கரயான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த ஒரு வயது முதிர்ந்த தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராமசாமி என்ற விவசாயியும் அவரது மனைவி பாக்கியமாளும் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் மகன் வெளியூரில் குடும்பத்தோடு வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்குப்பின், ராமசாமியின் மகன் தனது பெற்றோரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, செல்போன் அழைப்புகளை எடுக்கவில்லை. இதனையடுத்து, அவர் அருகிலிருந்தவரை அழைத்து, பெற்றோரை பார்க்குமாறு கூறியுள்ளார். அந்த நபர் அவர்கள் வீட்டிற்கு சென்றபோது, ராமசாமி மற்றும் பாக்கியம்மாள் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பாக்கியம்மாள் அணிந்திருந்த 15 சவரன் தங்க நகைகள் காணப்படவில்லை. வீட்டில் உள்ள மற்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை குற்றவாளிகள் பிடிபடாத நிலையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், “வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவது திராவிட மாடலா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இவர் இந்த சம்பவத்தைப் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த மேகரயான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி மற்றும் பாக்கியம்மாள் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நான்காண்டு கால திமுக ஆட்சியில் வெளியில் மட்டுமல்ல, வீட்டிற்குள்ளும் பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், தற்போது தமிழ்நாட்டில் பாதுகாப்பு பற்றிய ஒரு பெரிய கேள்வியைக் கிளப்பியுள்ளது.