சென்னை: கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை உடனடியாக சேர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்காக எடப்பாடிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், “கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நீக்குவேன்” என்று எடப்பாடி கூறியதை எதிர்த்து, 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்களே எடப்பாடியை அதிமுகவிலிருந்து நீக்கியிருந்தார் என செங்கோட்டையன் குற்றச்சாட்டு முன்வைத்தார். அவர் பேச்சின் போது கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்காதால், அவர்களுடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவேன் என்றும், தனது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் இனி எடப்பாடியுடன் பிரசாரங்களில் பங்கேற்க மாட்டேன் என்றும் செங்கோட்டையன் எச்சரித்தார். “அனைவரையும் ஒன்றுசேர்த்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
2016க்கு பின் தொடர்ந்து அதிமுக பல தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 2024 தேர்தலில் குறைந்தது 30 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என்றும், அதைப் பற்றி வேலுமணி கூட குறிப்பிட்டார் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். “மறப்போம், மன்னிப்போம்” என்ற கொள்கையில் செயல்பட வேண்டும் என்று எடப்பாடியிடம் சொன்னேன், ஆனால் அவர் ஏற்கவில்லை என்றார்.
மேலும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தை நினைவுபடுத்திய அவர், “எம்ஜிஆர் என்னை நேரடியாக ஊக்குவித்தார். ஜெயலலிதா ஆட்சியை சிறப்பாக நடத்தினார். ஆனால் தற்போது தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளோம். அதனால் கட்சியில் ஒற்றுமையை கொண்டு வருவது அவசியம்” என்று தெரிவித்தார்.
அதிமுகவில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த 10 நாட்கள் காலக்கெடுக்கு எவ்வாறு பதிலளிக்கிறார் என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.