
சென்னை: அண்ணா திமுக எம்.எல்.ஏக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தது, கட்சியினுள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருப்பினும், அவரைவிட சீனியர் எனக் கருதப்படும் செங்கோட்டையன் தனி நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இதற்காக டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் சென்னையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துள்ளார்.
சட்டசபையில் கட்சி உத்தரவை மீறியும் சில நேரங்களில் செயல்படுகிறார். அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த போதும், சட்டசபைக்குள் அமர்ந்து கேள்வி எழுப்பியதுடன் பதில்களும் பெற்றுள்ளார். இவ்வாறு செயலில் வேறுபாடு காணப்பட்டாலும், இதுவரை கட்சி தலைமையிடத்தால் அவர்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், கே.ஏ. செங்கோட்டையனுக்கு தொடர்பான கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி நேரடியாக பதிலளிக்கவில்லை. அதேபோல் செங்கோட்டையனும் எடப்பாடியின் பெயரைத் தவிர்த்துப் பேசுகின்றனர்.
அதிமுகவில் வைகை செல்வன் உள்ளிட்ட சிலர் செங்கோட்டையனை கடுமையாக விமர்சிக்கின்றனர். இதற்கிடையில், அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கும் கட்சியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார்.
இன்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எம்.எல்.ஏக்களுக்கு விருந்து அளித்த நிலையில், செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்தது அதிமுக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.