சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஸ்லீப்பர் பஸ்களை தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் பல்வேறு சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துத் துறை சார்பில் முதன்முறையாக தனியார் நிறுவனத்திடம் ஸ்லீப்பர் பேருந்துகளை குத்தகைக்கு எடுக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

குறிப்பாக பண்டிகைக் காலம் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் தென் மாவட்டங்களுக்கு நீண்ட தூரம் செல்லக்கூடிய பேருந்துகள் குறைவாகவே இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அந்த குறையை போக்க போக்குவரத்து துறை இந்த முடிவை எடுத்துள்ளது. முதற்கட்டமாக 20 தனியார் ஆம்னி பஸ்களை குத்தகைக்கு விட டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள் மே முதல் வாரத்தில் இயக்கப்படும் என்றும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்கனவே தனியார் பஸ்கள் வாடகைக்கு விடப்படும் சூழலில், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.