நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர் மீது சக பேராசிரியை பாலியல் புகார் கொடுத்த விவகாரத்தில் உயர்கல்வி துறை விசாரணை மேற்கொள்கிறது.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த இளம்பெண் கடந்த 2021-ம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்நிலையில் அங்குள்ள பேராசிரியர் ஒருவர் அந்த மாணவி பட்டம் பெறுவதற்கு தாமதம் ஏற்படுத்தி பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளார்.
இதன் காரணமாக நீண்ட போராட்டத்திற்கு பிறகு அங்குள்ள பேராசிரியர் மீது அந்த இளம் பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட துறை பேராசிரியர் இந்த மாணவியை எந்த கல்லூரியிலும் பணியாற்ற விடாமல் இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளார்.
தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வரும் இந்த பெண்ணுக்கு சில மாணவர்களை வைத்து பொய் புகார் கொடுத்து தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், முனைவர் பட்டம் பெரும் காலத்தில் இருந்து பாலியல் ரீதியான ஆசைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் நீண்ட ஆண்டுகளாக தன்னுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் பேராசிரியர் மாநில பெண்கள் ஆணையத்திற்கும், உயர்கல்வித்துறைக்கும் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த புகார் மனு எதிரொலியாக மாநில உயர்கல்வித்துறை விசாரணை நடத்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில பெண்கள் ஆணையமும் நேரில் வந்து பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்த உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.