சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு மருத்துவ பணியாளர் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையை தூய்மை பணியாளர் மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது அந்த நபருக்கு மருத்துவர் அறிவுறுத்தலின் பேரில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து கையில் இருந்த venflon-ஐ மருத்துவ பணியாளர் நீக்காமல் அதனை அங்கு வேலை பார்க்கும் தூய்மை பணியாளர் ஒருவர் செய்துள்ளார்.
மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் இதுபோன்று செய்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக நோயாளியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு மருத்துவ பணியாளர் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையை தூய்மை பணியாளர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.