சென்னை: ஆட்டோக்களுக்கான புதிய பயணக் கட்டணம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் தொழிலாளர் நலச் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினர். புதிய மீட்டர் கட்டணம், ஆட்டோ டாக்சி ஆப் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் 25 சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
ஆட்டோ சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். சென்னை மாநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகமான கும்தா மூலம் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சார்பில் ஆட்டோக்களுக்கான ஆப் உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார்.
ஆட்டோ தொழிலாளர் சங்கங்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பைக் டாக்சிகளை முறைப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். பைக் டாக்சிகளால் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஏற்படும் பிரச்னை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது. பைக் டாக்சிகள் தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பைக் டாக்சி விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.