ஊத்துக்கோட்டை : தாமரைப்பாக்கம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரில் ஆபத்தை உணராமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆபத்தான முறையில் குளித்து வருவதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் அணை பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பெரிய அளவிலான தடுப்பணை உள்ளது.
மழைக்காலத்தில் இந்த அணையில் தண்ணீர் நிரம்பினால் ஒரு பகுதி சோழவரம் ஏரிக்கும், மற்றொரு பகுதி கடலுக்கும் செல்லும். இதையடுத்து, கடந்த சில நாட்களாக தாமரைப்பாக்கம், செம்பேடு, வெள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்து வரும் மழையால், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, நேற்று முன்தினம், 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நேற்று 2000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமரைப்பாக்கம் அணை பகுதியில் உள்ள அணை நிரம்பி வழிகிறது.

கடந்த நவம்பர் மாதம் முதல் பெய்த மழைநீரால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. இதில், யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்று அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரில் அப்பகுதி மக்கள், மாணவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் குளிப்பதும், பெரியவர்கள் இருசக்கர வாகனங்களை கழுவுவதும் நடக்கிறது.
அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரில் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அணையில் உள்ள தடுப்புகளை பிடித்து இழுத்து வருகின்றனர். தடுப்புகள் உடைந்து, தண்ணீரின் வேகம் அதிகரித்தால், குளிப்பவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தாமரைப்பாக்கம் அணை பகுதியில் போலீசார் குவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.