பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற சபாநாயகர் மாநாட்டில், தமிழக ஆளுநர் குறித்த உரை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து சபாநாயகர் மு. அப்பாவு வெளிநடப்பு செய்தார். இந்தியா முழுவதும் உள்ள சபாநாயகர்கள் மாநாடு பீகார் சட்டசபை அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமை வகித்தார். இதில் சபாநாயகர் மு.அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்பாவு கூறியதாவது:-
நாடாளுமன்ற மசோதாக்கள் இந்தியில் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 348-வது பிரிவை மீறுவதாகும். மாநில சுயாட்சி கேள்விக்குறியாகியுள்ளது. கூட்டாட்சியும் நீர்த்துப் போய்விட்டது. மத்திய அரசு மாநில அரசுகளை மாற்றாந்தாய் போல் நடத்துவது அதிகரித்து வருகிறது. மின்சாரம் மற்றும் நிதிப் பங்கீட்டில் மத்திய அரசின் பாரபட்சம் மாநில அரசுகளுக்கு பெரும் தடையாக உள்ளது. தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் கவலையளிக்கிறது. அரசியலமைப்பு சட்டங்களை கேலிக்கூத்தாக்குகிறார். தமிழக மக்களையும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் தொடர்ந்து அவமதித்து வருகிறார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆளுநர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆரோக்கியமான ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு ஏற்ற வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான எனது ஆலோசனைகளை இந்த மாநாடு அங்கீகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படுவதற்கு பதிலாக, அரசியல் சாசன கடமைகளை ஆளுநர்கள் நிறைவேற்றவில்லை. இதன் காரணமாகவே, ஆளுநரின் பங்கு குறித்த பல்வேறு கமிஷன்களின் பரிந்துரைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆளுநரின் அரசியல் சட்ட மீறல்களால், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறுக்கிட்டு, கவர்னர் குறித்து இங்கு விவாதிக்கக் கூடாது என்றும், அது நிகழ்ச்சி நிரலில் பதிவு செய்யப்பட மாட்டாது என்றும் கூறினார். அப்போது, ”அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக தமிழக ஆளுநர் செயல்படுகிறார். இதை இந்த அவையில் விவாதிக்க முடியாது என்றால், வேறு எங்கு விவாதிக்க முடியும்?” என்று அப்பாவு கேள்வி எழுப்பினார். ஆனால், இதை ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பாவு மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார்.