சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி பலாத்கார வழக்கை தலைமை நீதிபதி நியமித்த சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.
கோட்டூர்புரம் லேக் வியூ பகுதியில் உள்ள ஞானசேகரன் வீட்டில் நேற்றுமுன்தினம் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி லேப்டாப், ஹார்டு டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். ஏற்கனவே, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞானசேகரனிடமும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஞானசேகரன் தனது ஒரு கால் மற்றும் ஒரு கை உடைந்ததாக கூறி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு தற்போது போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஒரு ‘சார்’ உடன் தனியாக இருக்க வேண்டும் என்று கூறி மாணவியை ஞானசேகரன் மிரட்டியதாகவும் தகவல் வெளியானது. அந்த ‘சார்’ யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) பரிந்துரையின் பேரில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவது இது நான்காவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.