ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் இரண்டு இயந்திரப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 4-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து 2 மோட்டார் படகுகளில் மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்கவும், அவர்களின் மீன்பிடி படகுகளை மீட்கவும், மீனவர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மோட்டார் படகு மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நெடுந்தீவு அருகே மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 2 விசைப்படகுகளுடன் காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.