காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இருந்து நேற்று இரவு மீன்பிடிக்க கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற தமிழக காரைக்காலைச் சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பால்மணி என்பவருக்கு சொந்தமான மோட்டார் படகில் பால்மணியின் அண்ணன் கலைமணி மற்றும் அதே ஊரை சேர்ந்த 18 மீனவர்கள் மோகன்குமார், சுதீன், மாணிக்கவேல், ஆகாஷ், ராமன், செல்வநாதன், தமிழ்க்கலை, சக்திவேல், வினித்குமார், பொன்னையன், கம்லேஷ், பூவாசன், சிவக்குமார், ஆறுமுகம், ரத்தினவேல், மற்றும் நிரஞ்சன் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பரசன் ஆகியோர் கடந்த 1-ம் தேதி இரவு 8 மணியளவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை கோடியக்கரை அருகே இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகு பழுதடைந்ததால் மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். இதனிடையே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 மீனவர்கள் படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் ஃபென்சல் புயல் காரணமாக ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் இருந்த மீனவர்கள், டிசம்பர் 1-ம் தேதி மீண்டும் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.