
நாகப்பட்டினம் மற்றும் கடலூர் துறைமுகங்களில் இருந்து மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தை விரைவில் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு தற்போது வாரத்தில் 5 நாட்கள் இரு திசைகளிலும் 150 பயணிகளுடன் இயக்கப்படுகிறது.
இதையடுத்து, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் இருந்து இலங்கையில் உள்ள மாலத்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, காங்கேசன்துறை உள்ளிட்ட இடங்களுக்கு சரக்குகளை கையாள தமிழ்நாடு கடல்சார் வாரியம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விவசாய பொருட்கள், மீன்பிடி பொருட்கள் மற்றும் பிற நுகர்பொருட்கள் உட்பட வருடத்திற்கு 75,000 தொன் சரக்குகளை கையாளும் திறன் இலங்கைக்கு உள்ளது.

மேலும் இது வரும் ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர் மற்றும் நாகை துறைமுகங்கள் சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்கள் மற்றும் மிதவைகளை கையாள தேவையான உள்கட்டமைப்பு மற்றும் சுங்கம், குடிவரவு மற்றும் சுகாதாரத் துறைகளின் தேவையான அனைத்து அனுமதிகளுடன் தயாராக உள்ளன. இறக்குமதியாளர்கள்-ஏற்றுமதியாளர்கள், முகவர்கள் மற்றும் மர மிதவை உரிமையாளர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தி பொருட்களை இறக்குமதி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் மற்றும் குறைந்த விலையில் திருப்திகரமான சேவைகளைப் பெற முடியும்.
இதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும். இந்த துறைமுகங்கள் மூலம் சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, துறைமுக அதிகாரிகளை கடலூர்- 94422 43225, நாகை- 94425 59978 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என நாகை கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.