ராமேஸ்வரம்: இலங்கை வவுனியாவில் தமிழக, இலங்கை மீனவர் பிரதிநிதிகள் கூட்டம் இன்று நடக்கிறது. தமிழக மீனவர்களின் படகுகளின் எண்ணிக்கையை இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை கடற்படை அதிகரித்துள்ளது. மேலும், மீனவர்களுக்கு கடும் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று இலங்கை வவுனியாவில் தமிழக, இலங்கை மீனவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரம் மீனவர் பிரதிநிதிகள் ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ், சுரேஷ் (நாகை மாவட்டம்) உள்பட 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று விமானம் மூலம் இலங்கை புறப்பட்டனர்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கப் பிரதிநிதிகள் இலங்கைத் தரப்பில் கலந்து கொள்கின்றனர்.