ராமேஸ்வரம்: இந்திய-இலங்கை மீனவர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இலங்கை முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடைபெற்ற திருமண விழாவிற்காக தமிழகம் வந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும், கண்டி எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியது:-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் பிரச்சினைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிய ஒருவரின் மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைகளுக்கு இரு நாட்டு மீனவர்களும், இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார இந்திய விஜயத்தின் போது மீனவர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்திருந்தார். அது விரைவில் நடக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இலங்கையில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, இந்திய மற்றும் சீன அரசாங்கங்கள் இலங்கைக்கு பெருமளவிலான நிதி உதவிகளை வழங்கியது, இன்று இலங்கை அதன் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகிறது.
எனவே, இரு நாடுகளுடனும் இலங்கை தொடர்ந்து நட்புறவுடன் இருந்து வருகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் இலங்கையில் மாகாணத் தேர்தல்களில் கூட்டணி நிலைப்பாடு குறித்து முக்கிய கட்சித் தலைவர்களுடன் பேசி விரைவில் அறிவிக்கும்” என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், ராமநாதபுரம் எம்பி நவஸ்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.