சேதுபாவாசத்திரம்: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில், சரபேந்திரராஜன்பட்டினம், புதுப்பட்டினம், கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து முகாமைத் துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், “ஆண்டிக்காடு, இரண்டாம்புலிக்காடு, அழகியநாயகிபுரம் ஊராட்சிகளை தனியாக பிரித்து, புதிதாக அமைக்கப்பட உள்ள அதிராம்பட்டினம் தாலுகாவில் சேர்ப்பதற்கு இப்பகுதி மக்கள் விரும்பவில்லை. அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக பட்டுக்கோட்டை தாலுகாவிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். எனவே, மாவட்ட வருவாய் அலுவலர் இதனைக் கவனத்தில் கொண்டு, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, 3 கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்” என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா மற்றும் முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் வரவேற்றார். நிறைவாக, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமுத்து நன்றி கூறினார்.
இம்முகாமில், மகளிர் உரிமைத்தொகை, காப்பீட்டு அட்டை, முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய ஆயிரக்கணக்கான மனுக்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினர்.
இதேபோல, ஆண்டிக்காடு, இரண்டாம்புலிக்காடு, அழகியநாயகிபுரம் ஊராட்சிகள் தொடர்ந்து பட்டுக்கோட்டை தாலுகாவிலேயே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.