சென்னை: மாநில குழந்தைகள் ஆணையம் தலைவர் நியமனம் இல்லாததால் முடங்கிக் கிடக்கிறது என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தை திருமணங்கள் பற்றிய செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஆர்டிஐ படி, 2023-ல் 1,054 குழந்தை திருமணங்களும், 2024-ல் 1,640 குழந்தை திருமணங்களும் நடந்துள்ளன. குறிப்பாக ஈரோடு, திருநெல்வேலி, பெரம்பலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்ந்து நடந்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குழந்தை திருமணங்கள் நடப்பதை கண்காணிக்க வேண்டிய மாநில குழந்தைகள் ஆணையம் தலைவர் இல்லாமல் முடங்கி கிடக்கிறது. இதனால், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களும் தங்கள் கடமையை செய்யாமல் உள்ளனர். எனவே தற்போதுள்ள குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
குழந்தை திருமணங்களை தடுக்க தமிழக அரசு விழிப்புணர்வு பிரசாரங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் ஊராட்சி அளவிலான கண்காணிப்பு குழுக்களையும், மாவட்ட அளவில் குழந்தை திருமண தடுப்பு குழுக்களையும் கலெக்டர் தலைமையில் அமைக்க வேண்டும். குழந்தைகள் ஆணையத்துக்கு உடனடியாக தலைவர் நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.