தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் மற்றும் சுற்றுப்பகுதியில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டு போனது குறித்து வல்லம் போலீசில் புகார்கள் பதிவானது.
இதுகுறித்து வல்லம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை கொண்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டு போன செல்போன்கள் 15 எண்ணிக்கையில் மீட்கப்பட்டன.
இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வல்லம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் மீட்கப்பட்ட 15 செல்போன்களில் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கூறுகையில், வல்லம் போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. தவறவிட்ட செல்போன்கள் மற்றும் திருடப்பட்டவை என பல மாவட்டங்களில் இருந்து தீவிர விசாரணையின் அடிப்படையில் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதிக விலை கொடுத்து வாங்கும் செல்போன்களை பொதுமக்கள் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாகனங்களில் செல்பவர்கள் சில நேரங்களில் தவறவிடும் செல்போன்களை பார்த்தால் அதை எடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதை தவிர்த்து சிம்கார்ட்டை எடுத்து விட்டு உங்களின் சிம்கார்ட்டை வைத்து உபயோகப்படுத்தினால் நாங்கள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடுவோம்.
மேலும் செல்போன் கடை வைத்துள்ளவர்கள் உரிய பில் இல்லாமல் செல்போன்களை வாங்கி விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்களும் இதில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.