சென்னை: வருங்கால வைப்பு நிதிக் கழகத்தால் நிராகரிக்கப்பட்ட ஓய்வூதிய உயர் விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்யக் கோரி, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள வருங்கால வைப்பு நிதிக் கழக அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என பல்வேறு தரப்பினர் 750 பேர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் வருங்கால வைப்பு நிதி கழக ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், சங்கத்தின் பொதுச் செயலர் டி.விஸ்வநாதன் கூறியதாவது:- 2022 நவ., 4-ல் பிறப்பித்த உத்தரவின்படி, இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற பல்வேறு பணியாளர்கள் உயர் ஓய்வூதியம் பெற சட்டப்படி தகுதியுடையவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து எங்களது பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு நெசவாளர் சங்க நிர்வாகத்தினர் இணைந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மனு அளித்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டதை PF அலுவலகம் உறுதி செய்திருந்தாலும், எங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் சுமார் 279 விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது. இந்த நிராகரிப்பு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் உரிய நேரத்தில் விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். PF அதிகாரிகள் எந்த நேர வரம்பு குறித்தும் உறுப்பினர்களுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை மற்றும் சரியான முறையில் தகவல் தெரிவிக்கவில்லை.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. இதனால், ஓய்வு பெற்ற பணியாளர்கள், உரிய பலன்களை இழக்கின்றனர். எனவே, இந்த விவகாரம் அவசரமானது மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தாங்கள் உடனடியாகத் தலையிட்டு அவர்களின் உயர் ஓய்வூதிய விண்ணப்பங்களை தாமதமின்றி மறுபரிசீலனை செய்து அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.