கடினமான வேலை செய்வோர், வெயிலில் அலைவோர் எல்லோருக்கும் பருத்தி (காட்டன்) ஆடைகள் ஒரு நல்ல தீர்வு. ஆண்கள் அணியும் ஆடைகளில் மிகப்பெரும்பான்மை வகிப்பது சட்டைகளே. அதில் அலுவலகம் போன்ற வேலை நிமித்தமாக செல்லும் இடங்களுக்கு பார்மல்ஸ் என்றும், குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் வெளியே செல்லும்போதும் அணிவதற்கு கேஷ்வல்ஸ் என்றும் தனித்தனி ரகங்கள் இருக்கின்றன. பொதுவாக காட்டன் சட்டைகள் வெயில் காலத்தில் உடலுக்கு ஏற்றது.
உண்மையில் காட்டன் வெயிலுக்கும் மட்டும் அல்ல எல்லாவிதமான பருவநிலைக்கும் ஏற்ற ஆடை என்பதுதான் உண்மை. வெயில் வெளிச்சூட்டை உடலுக்கு அனுப்பாமல் தடுத்து குளிர்ச்சியை தரும் காட்டன், மழைக்காலங்களிலும், குளிர்க்காலங்களிலும், உடல் சூட்டை தக்கவைத்து ஒரு கதகதப்பை தரும் என்பது இதன் தனிச்சிறப்பு எனலாம். எளிமையும் கம்பீரமும் ஒருசேர கிடைப்பது காட்டன் சட்டைகளிடம்தான்.
காட்டன் துணியின் தன்மைகளில் மிகவும் முக்கியமானதும் பயன் தரக்கூடியதுமான ஒரு அம்சம் அதன் ஈரம் உறிஞ்சும் தன்மைதான். ஒரு காட்டன் சட்டை உலர்ந்த நிலையில் தன் எடையை விட ஐந்து மடங்கு அதிக ஈரத்தை உறிஞ்சும். இதனால் உடற்பயற்சி செய்வோர் காட்டன் உடை அணியும்போது, வெளியேறும் அதிகப்படியான வியர்வை உடலில் தங்காமல் உடனுக்குடன் உறிஞ்சப்பட்டு தோலில் வியர்வை தங்காதவண்ணம் உலர்ந்து உடலுக்கு நோய்கள் வராமல் பாதுகாப்பு தருகிறது. எனவே கடினமான வேலை செய்வோர், வெயிலில் அலைவோர் எல்லோரும் காட்டன் சட்டை ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம்.
மேலும் உடலும் ஆடைக்கும் நடுவில் காற்றை தக்கவைப்பதால் அணிந்துகொள்ள மென்மையாகவும் இருக்கிறது. சிலருக்கும் மிகவும் வெப்பமான சருமம் இருக்கும். அம்மாதிரியானவர்கள், உடலுக்கு உடுத்தும் ஆடைத்தேர்வில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். ஏனென்றால் சில ஆடைகள் உடலுக்கு ஒவ்வொமையை ஏற்படுத்தி தோல்வியாதியில் கொண்டுவிட்டுவிடும். ஆனால் காட்டன் ஆடைகளை பொறுத்த அளவில் இந்த பிரச்சனை இல்லை.
பருத்தி மிகவும் பாதுகாப்பானது. தோலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் எதுவும் பருத்தியில் இல்லை அதனால்தான் இதை மருத்துவமனையில் பாண்டேஜ் போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர். மேலும் குழந்தைகள் ஆடைக்கும் பெரும்பாலும் காட்டன்களையே பயன்படுத்துகின்றனர்.