சென்னை: மத்திய அரசின் வக்பு திருத்தச் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது, தமிழக வெற்றிக் கழகம் தாக்கிய மனுவின் தாக்கமே என கட்சியின் தலைமை அலுவலகம் தெரிவித்து இருக்கிறது. இந்த தடை உத்தரவை பெற்றுத் தந்தது, அந்த மனுவுக்காக ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம் மூலமாகத்தான் எனும் விளக்கம், சமூக வலைதளங்களில் பரவிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கிறது.

இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியத்தை மையமாகக் கொண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக, விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன் சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினார். அந்த வழக்கில் அவர் முன்வைத்த சட்டபூர்வமான வாதங்களை ஏற்று, உச்சநீதிமன்றம் முக்கியமான இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவில், வக்பு சட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்றும், ஏற்கனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டு, இது இஸ்லாமியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தீர்ப்பு என வரவேற்றார்.
அந்த அறிக்கையில், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தனது கட்சி எப்போதும் குரல் கொடுக்கும் என்றும், பாசிச அணுகுமுறைக்கு எதிராக தொடரும் சட்டப் போராட்டத்தில் உறுதியாக துணை நிற்போம் என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார். மேலும், வழக்கில் நம்முடன் நின்று இந்த தீர்ப்பை பெற்றுத் தந்த அபிஷேக் சிங்விக்கும் அவரது சட்டக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில், விஜய்யின் கட்சி தாக்கிய மனு விசாரணைக்கு ஏற்கப்படவே இல்லை, வழக்கறிஞர் வாதாடவில்லை என்றும், ஆனாலும் இவரது கட்சி தீர்ப்புக்கு உரிமை கோருகிறது என்ற விமர்சனங்கள் பரவின. இதற்குப் பதிலளிக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையகம், அபிஷேக் சிங்வி வழிநடத்திய வழக்கின் முக்கியத்துவம் குறித்து மேலும் விளக்கமளித்து, அந்த வழக்கின் காரணமாகவே தடை உத்தரவு பிறந்தது என உறுதியாக தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் வழக்கறிஞர் ஆதரவுடன் நீதி மன்றத்தில் வெற்றியை அடைந்ததும், அதனை தொடர்ந்து உருவான சமூக ஊடக விமர்சனங்கள் மற்றும் அதற்கான அரசியல் பதிலடி என சுழன்று வருகிறது. இது விஜய் கட்சியின் அரசியல் நடையை நாடு முழுவதும் கவனிக்க வைக்கும் ஒரு முக்கியமான கட்டமாகவும் பார்க்கப்படுகிறது.