14 ஆண்டுகளுக்கு பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை மாற்றி 2018 மற்றும் 2019-ல் இரண்டு கட்டங்களாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்தியது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தாலும், பாடத்திட்டம் நீளமாக உள்ளதாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக கணிதம் மற்றும் அறிவியல் பாடப்புத்தகங்கள் 600 பக்கங்களுக்கு மேல் இருக்கும்.
இதனால் தேர்வுக்கு தயாராக முடியாமல் மாணவர்கள் தவிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தமிழ் மொழி பாடத்திற்கான மாநில பள்ளிக் கல்வித்துறையின் பாடப்புத்தகங்களை படித்து வருகின்றனர். ஆனால், பாடப்புத்தகத்தின் அளவு பெரிதாக உள்ளதால், அவற்றை குறைத்து தேர்வுகளை நடத்தி வருகின்றனர். உதாரணமாக, 10-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் மொத்தம் 9 பாடங்கள் உள்ளன.

ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 பாடங்களாகக் குறைத்து மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர். இந்நிலையில், மாநில பாடத்திட்டத்திலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடத்திட்டம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ”ஆசிரியர் உட்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 1 முதல், 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடத்திட்டம், அதிகபட்சமாக, 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பில் 9 பாடங்கள், 10-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் 7 ஆகவும், 11-ம் வகுப்பில் 8 பாடங்கள் 6 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கு புதிய, திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.