டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்கு கேரளா முட்டுக்கட்டையாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. அணை விவகாரத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தால் தீர்வு கிடைக்காது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவை தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது; அணையின் பாதுகாப்பு குறித்து நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்று கேரள அரசு வாதிட்டது. அப்போது, அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி அளிக்காமல், அணையை பாதுகாக்க நிபுணர்களை நியமிக்க வேண்டும் என கேரள அரசு இங்கு கூறுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது. மேலும் ஆய்வு நடத்தலாம்.
ஆனால், அணையில் பராமரிப்பு பணிகளுக்கு கேரளா அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் சேமிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. எனவே, இதுபற்றி மீண்டும் மீண்டும் பேச வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கேரள அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதிலளித்தனர்.
அணையை பலப்படுத்தும் வழக்கை மட்டுமே இங்கு விசாரிக்க முடியும். அணை விவகாரத்தில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தால் தீர்வு கிடைக்காது. அணை கண்காணிப்பு குழு தொடர வேண்டுமா அல்லது அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குழு அமைக்க வேண்டுமா என்பது குறித்து இரு மாநிலங்களும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-வது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.